காத்தான்குடி கடலில் தத்தளித்த இந்திய மீன்பிடிப் படகு – கரைக்கு இழுத்து வந்த மீனவர்கள்.!!!
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்பரப்பில் கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத படகு ஒன்றை காத்தான்குடி மீனவர்கள் இன்று (20) கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
மீனவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படையினரும் இராணுவத்தினரும் வழங்கிய அனுமதியுடன் காத்தான்குடி மீனவர்கள் நடுக்கடலுக்குச் சென்று அந்தப் படகை கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.
சுமார் 18 அடி நீளமுடைய இந்தப் படகில் “இந்திய நாட்டின் கல்கத்தா விளையாட்டு கழகம்” என பொறிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், படகை இயக்க எவரும் அதில் இல்லாததுடன், இயந்திரமும் இல்லாத நிலையில் அந்தப் படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தக் கடற்பரப்பில் இவ்வாறான மர்மமான படகு ஒன்று தத்தளித்த சம்பவம் பதிவாகவில்லை என்றும், இது முதலாவது சம்பவம் என்றும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்தப் படகு தற்போது பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



