ஒலுவிலுக்கு பெருமை சேர்த்த ஜலால்டீன் சண்ஷிதா; பேராசிரியர் சுல்தான்பாவா ஞாபகார்த்த தங்கப்பதக்கம் வென்று சாதனை.!!!
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஒலுவிலைச் சேர்ந்த மாணவி ஜலால்டீன் சண்ஷிதா, பேராசிரியர் சுல்தான்பாவா ஞாபகார்த்த தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் ஏ.ஆர்.எம். மன்சூர் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
பிரயோக விஞ்ஞான பீடத்தின் 2018/2019 கல்வியாண்டைச் சேர்ந்த ஜலால்டீன் சண்ஷிதா, இரசாயனவியல் விசேடப் பட்டப்படிப்பில் GPA 3.90/4.00 பெறுபேற்றுடன் முதலாம் தர (First Class) சித்தி பெற்றதற்காக பேராசிரியர் சுல்தான்பாவா ஞாபகார்த்த தங்கப்பதக்கத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
ஒலுவில் வரலாற்றில் ஒரு பல்கலைக்கழக மாணவி இவ்வாறு தங்கப்பதக்கம் பெற்று கௌரவிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பதால், இது அப்பகுதியின் கல்வி வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
மேலும், ஒலுவில் கிராமத்தின் 95 ஆண்டுகால கல்வி வரலாற்றில் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சையில் முதன்முறையாக 9A சித்தி பெற்றவரும் இவரே ஆவார். அதனைத் தொடர்ந்து க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் இரசாயனவியலில் A சித்தியையும், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றையும் பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகக் கல்விக்காலத்தில் இரசாயனவியல் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட அவர், அவற்றை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்ததுடன், பல்வேறு கல்விசார் பாராட்டுகளும் பெறுமதிமிக்க சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.
ஜலால்டீன் சண்ஷிதா, முன்னாள் பிரதம தாதிய மேற்பார்வை அதிகாரியும் முன்னாள் திறந்த பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளருமான கலாபூசணம் கவிஞர் ஒலுவில் எஸ். ஜலால்டீன் மற்றும் முகம்மது ஜமால்தீன் சித்தி ஹுசைமா தம்பதிகளின் இரண்டாவது புதல்வியாவார். மேலும், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரியான எம்.எம். மஹீஸ் அவர்களின் மனைவியும், மனாஹில் கதீஜாவின் தாயாருமாவார்.
அவரது இந்த அபூர்வமான கல்விச் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.