இந்திய உதவித் திட்டங்களில் தேக்கம்; தீர்வு காண உயர்மட்ட பேச்சுவார்த்தை.!!!
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் நோக்கில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கிடையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்திய உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு நிர்மாணத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தடைகள், அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்கான நடைமுறைகள் மற்றும் திட்ட ஒப்பந்தங்களை புதுப்பித்து பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட பல அமைச்சுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களும் இக்கலந்துரையாடலின் மையமாக அமைந்தன.
மேலும், கடந்த அனர்த்தங்களால் ஏற்பட்ட சேதங்களை மீளமைக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் வழங்கிய 450 மில்லியன் டொலர் கடன் மற்றும் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றமும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இத்திட்டங்களின் செயல்பாட்டை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தில் தனிப்பிரிவு ஒன்றை அமைப்பது குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சார்பில் பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய் குல்கர்ணி, முதல் செயலாளர்கள் நவ்யா சிங்லா மற்றும் சௌரப் சப்லோக் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






