காத்தான்குடியில் கால்நடை வளர்ப்பு ஊக்குவிப்பு திட்டம் – பயனாளிகளுக்கு விசேட பயிற்சி செயலமர்வு.!!!
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்வாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பல்துறை அபிவிருத்தி (PSDG) திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கால்நடை உற்பத்தி சுகாதார நிலையத்தின் மூலம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றை முறையாக பராமரித்து உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் விசேட தெளிவூட்டல் செயலமர்வு நேற்று (05) காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி கால்நடை வைத்திய அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இச்செயலமர்வு, கால்நடை வைத்திய அலுவலக பொறுப்பதிகாரி டாக்டர் மர்யா ஹர்ஷினி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 100 பயனாளிகள் கலந்து கொண்டு, கால்நடை பராமரிப்பு, நோய் தடுப்பு, உணவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவான பயிற்சிகள் மற்றும் அறிவுறுத்தல்களை பெற்றனர். மேலும், மாவட்ட கால்நடை வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்று நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்கினர்.
கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் இத்தகைய திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.





