“விலைவாசியைக் குறை – வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்து” எனக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்.!!!
திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (11) விலைவாசி உயர்வுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“விலைவாசியைக் குறை – வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்து” என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (TSDP) ஏற்பாட்டில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தில் பெட்ரோல், எரிவாயு மற்றும் மின்கட்டணங்களை குறைக்க வேண்டும் எனவும், வறிய மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதனுடன், வெருகல் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராம மக்கள் எரிபொருள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பூறல், சீனன்வெளி, நல்லூர், பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு, கடற்கரைச்சேனை உள்ளிட்ட கிராம மக்கள் போதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.
எரிபொருள் விலை உயர்வால் தனியார் போக்குவரத்தையும் பயன்படுத்த முடியாமல் மக்கள் முடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



