மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவுக்கு: பல மில்லியன் ரூபாய் பெறுமதியான நன்கொடைகள்.!!!
மட்டக்களப்பு பாரம்பரிய லயன்ஸ் கழகமும், இலங்கை அபேக்சா நன்கொடை நிறுவனமும் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கின.
இந்த நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (30) வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அபேக்சா நிறுவனத்தின் தலைவர் லயன் எஸ்.கே. குமார், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களான உ. தேவகுமார், எந்திரி. த. மயூரன், நி. அனிஸ்டன், சர்வதேச லயன்ஸ் கழக மாவட்டம் 306 D10 ஆளுநர் லயன் ஷாகிர் அகமட், முன்னாள் ஆளுநர் லயன் லோகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் பொறுப்பாளரும் வைத்திய நிபுணருமான டாக்டர் ஏ. இக்பால் வரவேற்புரையாற்றினார்.
இதன்போது நாளக் குழாய்களை கண்டறியும் மருத்துவ இயந்திரம், சிறுநீர் இழக்கி மருந்துகள், குடிநீரை சுத்திகரித்து வழங்கும் நீர் வடிகட்டி இயந்திரங்கள், சுவரில் பொருத்தும் மின்விசிறிகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் புற்றுநோய் பிரிவுக்கு கையளிக்கப்பட்டன.
மேலும், புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் 100ஆவது வார நிகழ்வு இம்முறை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விநியோகிக்கப்பட்டன.









