அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு: ஜனநாயகக் கட்சி முன்னிலை.!!!
• அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றும் முனைப்பில் ஜனநாயகக் கட்சி – ட்ரம்ப்பின் எஞ்சிய ஆட்சிக்காலத்துக்கு சவால்?
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.
அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை என இரு அவைகளைக் கொண்டுள்ளது. இதில் பிரதிநிதிகள் சபையின் 435 உறுப்பினர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். அதேவேளை, செனட் சபையின் 100 உறுப்பினர்களும் ஆறு ஆண்டுப் பதவிக்காலத்தைக் கொண்டுள்ளதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி குறுகிய பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு 218 இடங்கள் தேவைப்படும் நிலையில், குடியரசுக் கட்சி 218 இடங்களையும் ஜனநாயகக் கட்சி 214 இடங்களையும் கொண்டிருந்தன.
அதேபோன்று, செனட் சபையில் பெரும்பான்மைக்குத் தேவையான 51 இடங்களில் குடியரசுக் கட்சி 53 இடங்களையும் ஜனநாயகக் கட்சி 47 இடங்களையும் தன்வசம் வைத்திருந்தன.
இந்நிலையில், இம்முறை பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றதுடன், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர் பதவிகள் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகப் பதவிகளுக்கான தேர்தல்களும் இடம்பெற்றன.
ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தனது அதிகாரத்தைத் தக்கவைக்குமா அல்லது ஜனநாயகக் கட்சி இரு அவைகளையும் கைப்பற்றுமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலின் ஆரம்ப முடிவுகள் இன்று (04) காலை முதல் வெளியாகத் தொடங்கின.
ஈரான் விவகாரம் உள்ளிட்ட அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள், விலைவாசி உயர்வு, குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகியவை தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த மாநிலங்களில் வெளியான ஆரம்பகட்ட முடிவுகளின்படி, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் 91 இடங்களிலும் குடியரசுக் கட்சியினர் 50 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் 45 இடங்களில் வெற்றிபெற்று மேலும் 7 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும், குடியரசுக் கட்சியினர் 36 இடங்களில் வெற்றிபெற்று மேலும் 7 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் ஆரம்பகட்டத் தேர்தல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அனைத்து இடங்களுக்குமான இறுதி முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஜனநாயகக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் எஞ்சிய இரண்டு ஆண்டுகால ஆட்சியில் புதிய சட்டங்களை நிறைவேற்றுவது, நிர்வாகக் கொள்கைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட விடயங்களில் அவருக்கு நாடாளுமன்ற ரீதியான சவால்கள் அதிகரிக்கலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.