பென்தோட்டா கடலில் பாராமோட்டார் விமானம் விபத்து; லெபனான் பெண் சுற்றுலாப் பயணி பலி.!!!
பென்தோட்டா சுற்றுலா நகரின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்கும் நோக்கில் இயக்கப்பட்ட பாராமோட்டார் (Paramotor) சிறிய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில், 31 வயதுடைய லெபனான் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து புதன்கிழமை (29) மாலை சுமார் 4.00 மணியளவில், பென்தோட்டா கடற்கரையிலிருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமானத்தில் பயணித்த கொலம்பியாவைச் சேர்ந்த விமானி ரெஸ்ட்ரெபோ லோபஸ் ஜோனதன், விபத்து நேரத்தில் கடலில் குதித்து கரையை நோக்கி நீந்திச் சென்று உயிர் தப்பியுள்ளார்.
விபத்துக்குப் பின்னர் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியின் போது, கடலுக்குள் மூழ்கியிருந்த விமானத்தில் சிக்கிய நிலையில் பெண் பயணியின் சடலம் மீட்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுத்துறை நாகோடா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பாராமோட்டார் விமானம் அலுத்கம பகுதியில் சுற்றுலா சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பாராமோட்டார் விமான விபத்து பென்தோட்டா சுற்றுலா வரலாற்றில் முதல் முறையாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பென்தோட்டா பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் ஆய்வாளர் அஜந்த புஷ்பகுமாரா தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
