கடல் வழியாக கடத்தப்பட்ட பீடி இலைகள் சிக்கின; டிங்கி படகுகள், லொறியும் கைப்பற்றல்.!!!
-கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்-
நீர்கொழும்பு வெல்லவீதி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2,276 கிலோ கிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, பீடி இலைகளை கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு டிங்கி படகுகளும் ஒரு லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான ‘கெளணி’ நிறுவனமும் நீர்கொழும்பு தெல்வத்தை பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சோதனையின்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட இரண்டு டிங்கி படகுகள் மற்றும் ஒரு லொறி பரிசோதிக்கப்பட்டன. இதன்போது, டிங்கி படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர் லொறியில் ஏற்றி எடுத்துச் செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி, இரண்டு டிங்கி படகுகள் மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு தெல்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



