மிக நீண்டகால தேவைக்கு தீர்வு: மொடன் பார்ம் கர்பலா வீதி கொங்கிரீட் வீதியாக தரம் உயர்வு.!!!
ஆரையம்பதி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மொடன் பார்ம் – கர்பலா வீதி சுமார் 02 மில்லியன் ரூபாய் செலவில் கொங்கிரீட் வீதியாக தரம் உயர்த்தும் பணிகள் நேற்று (06) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஆரையம்பதி கிழக்கு வட்டாரத்துக்குட்பட்ட இவ்வீதியானது கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, குறித்த பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். நஸீமின் அயராத முயற்சியின் பயனாக 2025 ஆம் ஆண்டுக்கான PSDP வேலைத் திட்டத்தின் கீழ் 02 மில்லியன் ரூபாய் செலவில் இவ்வீதியை கொங்கிரீட் வீதியாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மண்முனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கே. செந்தில்குமார், பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். நஸீம், பிரதேச சபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் கர்பலா சனசமூக நிலையத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
இவ்வீதியின் மேம்பாட்டினால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், நீண்டகாலமாக நிலவிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.







