கலாசாரத்தை மையமாகக் கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க.!!!
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வெறும் பௌதிக அபிவிருத்தி மட்டும் போதாது; அந்த அபிவிருத்தி நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இயல்பாகப் பிணைந்திருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நாட்டின் கலாசாரமும் பெறுமதிகளும் வளர்ச்சியின் அடித்தளமாக அமைய வேண்டும் என்றும், உலகின் பெரும்பாலான முன்னேறிய நாடுகள் தமது கலாசார அடித்தளத்தை மையமாகக் கொண்டு முன்னேற்றம் கண்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இன நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்துவதில் கலாசார அடித்தளம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
இதன்போது, கிராமப்புற வழிபாட்டுத் தலங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களின் முன்னேற்றமும் ஆய்வு செய்யப்பட்டது. விகாரைகளில் தானசாலைகள் அமைத்தல், குடிநீர் வசதிகளை மேம்படுத்தல், பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களின் அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்தல், அனர்த்தங்களால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.601 மில்லியன் ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

