கடற்கரை வீதியில் போக்குவரத்து ஒழுங்குமுறை: காத்தான்குடி நகர முதல்வர் தலைமையில் வர்த்தகர்களுடன் கலந்துரையாடல்.!!!
டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கடந்த (06) காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது.
கடற்கரை வீதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஒழுங்குமுறை தொடர்பான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இக்கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் ஒற்றைநாள் – இரட்டை நாள் முறையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
மேலும், போக்குவரத்து (Transport) வாகனங்கள் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாத்திரம் குறித்த வீதியில் பொருட்களை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், ஒவ்வொரு வர்த்தக நிலையத்திற்கும் முன்னால் உரிமையாளரின் ஒரு மோட்டார் சைக்கிள் மாத்திரம் நிறுத்த அனுமதிக்கப்படுவதுடன், Gas Company வாகனங்கள் மாற்று வழியாக முதியோர் இல்ல வீதியை பயன்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பொலிஸார், பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள், காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பல வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.







