யோஷித ராஜபக்ஷவின் பணச்சலவை வழக்கு நவம்பர் 03க்கு ஒத்திவைப்பு.!!!
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான பணச்சலவை வழக்கு, எதிர்வரும் நவம்பர் 03ஆம் திகதி பூர்வாங்க நிபந்தனை மாநாட்டிற்காக அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (28) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானார். எனினும், இரண்டாவது பிரதிவாதியான டெய்சி பொரஸ்ட் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அவரது சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, டெய்சி பொரஸ்டின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை நவம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ரூ.57 மில்லியன் தொடர்பில் குற்றச்சாட்டு
சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 57 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பொரஸ்ட் மீது சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.