நிந்தவூர் கால்பந்தாட்டத் தொடரில் ஏறாவூர் யங் ஸ்டார் அணி சம்பியன்.!!!
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற எச்.எம்.வை.எல். கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
நிந்தவூர் கென்ட் விளையாட்டுக் கழகத்தின் 31ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “ஒரு கிண்ணம் – ஒரு மகிமை” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுப்போட்டி கடந்த 13ஆம் திகதி ஆரம்பமானது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 23 முன்னணி கால்பந்தாட்டக் கழகங்கள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் யங் ஸ்டார் அணி ஆதிக்கம் செலுத்தியது.
அணியின் 16ஆம் இலக்க வீரர் எம்.எம். முஸ்தாக் அபாரமாக விளையாடி போட்டியின் 10ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் பெற்றார். தொடர்ந்து 40ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.
ஆட்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் கோல் அடித்த முஸ்தாக், ஹெட்ரிக் சாதனை படைத்ததுடன், தனது அணியின் 3–0 வெற்றியையும் உறுதி செய்தார்.
இச்சுற்றுப்போட்டிக்கு எச்.எம்.வை.எல். நலன்புரி அறக்கட்டளை முழுமையான அனுசரணை வழங்கியதுடன், போட்டிகளை அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனம் மேற்பார்வை செய்தது.
விருதுகளை குவித்த முஸ்தாக்
இறுதிப் போட்டியின் சிறந்த வீரருக்கான மர்ஹூம் நூருல் ஹிதாயா வெற்றிக்கிண்ணத்தை ஏறாவூர் யங் ஸ்டார் வீரர் எம்.எம். முஸ்தாக் பெற்றுக்கொண்டார்.
மேலும், போட்டியில் அதிக கோல்களைப் பெற்ற வீரருக்கான மர்ஹூம் வை.எல்.எம். நஸார் தங்கக் காலணி வெற்றிக்கிண்ணத்தை மருதமுனை ஈஸ்டன் யூத் அணியின் எம்.எம். சபா 7 கோல்களுடன் சுவீகரித்தார்.
சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான மர்ஹூம் வை.எல்.ஏ. அஸீஸ் வெற்றிக்கிண்ணத்தை ஏறாவூர் யங் ஸ்டார் வீரர் எம். அதீர் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, இறுதிப் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட எம். ஷக்கீலுக்கு மர்ஹூம் ஹபீப் மொஹம்மட் தங்க ஒளி வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டது.
சம்பியனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு
இரண்டாம் இடத்தைப் பெற்ற மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு பதக்கங்களுடன் 50,000 ரூபாய் பணப்பரிசும் இரண்டாம் இடக் கிண்ணமும் வழங்கப்பட்டன.
சம்பியனான ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கு சம்பியன் வெற்றிக் கிண்ணம், வீரர்களுக்கான வெற்றிப் பதக்கங்கள் மற்றும் 1,00,000 ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது.
பரிசில்கள் நிந்தவூர் கென்ட் விளையாட்டுக் கழகத் தலைவர் ஓய்வுபெற்ற பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எல். ரபீக், பிரதம அதிதியான இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் கௌரவ ஏ.எச்.எம். திலீப் நவாஸ், எச்.எம்.வை.எல். நலன்புரி அறக்கட்டளைத் தலைவர் வை.எல்.எம். யஹ்யா, தவிசாளர் பொறியியலாளர் வை.எல்.எம். நயீம், செயலாளர் எம்.என். அப்துல்லாஹ் மற்றும் அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் ஆகியோரால் வழங்கப்பட்டன.
போட்டியின் பிரதான நடுவராக எம்.எம். ரியாஸ் கடமையாற்றியதுடன், இணை நடுவர்களாக ஏ.டபிள்யூ.என். ரிபாஸ், ஏ.பி.எம். ரமேஸ் மற்றும் எம்.பி.எம். ரஷீட் ஆகியோர் பணியாற்றினர்.




