லீசிங் தவணை செலுத்தாத வாகனங்களை பலவந்தமாக கைப்பற்ற முடியாது – பொலிஸார் எச்சரிக்கை.!!!
லீசிங் தவணைப் பணம் செலுத்தத் தவறியதற்காக வாகனங்கள் அல்லது ஏனைய சொத்துக்களை சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் பலவந்தமாக மீளக் கையகப்படுத்த முடியாது என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
நிதியியல் மற்றும் லீசிங் நிறுவனங்களால் வழங்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை மீளக் கையகப்படுத்தும் போது, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க லீசிங் நிதியியல் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ், ஏதேனும் சொத்தை மீளக் கையகப்படுத்துவதற்கு முன்னர், குறித்த பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு லீசிங் நிறுவனம் முன்கூட்டியே அறிவிப்பது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வாகனத்தின் உரிமையாளர் அல்லது சொத்தின் உரிமையாளர் மீளக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில், பலவந்தமாகவோ அல்லது அச்சுறுத்தல் மூலமாகவோ வாகனத்தையோ ஏனைய சொத்துக்களையோ கைப்பற்ற முயற்சிக்கக் கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில், உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாவட்ட நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட விதிமுறைகளுக்கு முரணாக பலவந்தமாக வாகனங்கள் அல்லது ஏனைய சொத்துக்களை மீளக் கையகப்படுத்த முயற்சிக்கும் லீசிங் நிறுவனங்கள் அல்லது அவற்றின் முகவர்களுக்கு எதிராக கடுமையான குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.