விடுவிக்கப்படாத 1,025 இறக்குமதி வாகனங்கள் ஏலத்திற்கு; சுங்கத்தின் அதிரடி நடவடிக்கை.!!!
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டு இதுவரை உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்பட்டு விடுவிக்கப்படாத சுமார் 1,025 வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விலைமனுக்கோரல் (Tender) முறையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை சுங்கத்திணைக்களம் முன்னெடுத்து வருகிறது.
இவற்றில் சுமார் 625 வாகனங்கள், துறைமுகத்தை வந்தடைந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக கடந்துள்ள போதிலும் உரிமையாளர்களால் விடுவிக்கப்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்கள் எந்தவிதமான சுங்க விதிமீறல்களுக்கும் உட்பட்டவை அல்ல என்றும், இறக்குமதியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை விடுவிக்கத் தவறியதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஏலம் அல்லது விலைமனுக்கோரல் மூலம் கிடைக்கும் தொகையில் முதலில் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய வரிகள் அறவிடப்படும். அதன் பின்னர் துறைமுக மற்றும் சேமிப்புக் கிடங்கு கட்டணங்கள் கழிக்கப்பட்டு, எஞ்சிய தொகை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களுக்கு மீள வழங்கப்படும் என்றும் சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.