யானை–மனித மோதலைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை; வனவிலங்கு திணைக்களத்திற்கு 181 புதிய வாகனங்கள் கையளிப்பு.!!!
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் களப்பணிகளை வலுப்படுத்துவதற்கும், யானை–மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் 294 புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை வழங்கிய அனுமதியின் முதற்கட்டமாக 181 புதிய வாகனங்கள் இன்று (27) திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன.
சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 16 டபுள் கெப் (Cab) வாகனங்களும் 165 மோட்டார் சைக்கிள்களும் அடையாளப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்த வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் ரூ.2 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை–மனித மோதல்கள் அதிகளவில் பதிவாகும் பகுதிகளை அடையாளம் கண்டு, அப்பகுதிகளில் செயல்படும் வனவிலங்கு காரியாலயங்களுக்கு இவ்வாகனங்கள் முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னதாக, கடந்த ஜூன் 20ஆம் திகதி சுற்றாடல் அமைச்சர் தலைமையில் வனவிலங்கு பணிப்பாளர் நாயகத்திடம் 9 டிராக்டர்களும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்கள், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.








