கடற்கரையில் ஜெல்லிமீன் அச்சுறுத்தல்;கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை.!!!
பாணந்துறை கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியுள்ளதால், அப்பகுதியில் பொதுமக்கள் கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (26) விடுமுறை தினத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த சுமார் 10 பேர் ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதால் காயமடைந்து, பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் நான்கு சிறு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சை பெற்ற பின்னர் அனைவரும் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கடற்கரையில் ஜெல்லிமீன்கள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வெளியாகும் வரை கடலில் இறங்கி குளிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.