சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1030 கிலோ உலர்ந்த மஞ்சள் பறிமுதல்.!!!
-கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்-
கற்பிட்டி தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் “விஜய” புதன்கிழமை (22) மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இருபத்தாறு (26) பைகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன.
அந்த சோதனையின் போது பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 1038 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதால் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கைப்பற்றப்பட்ட இந்த உலர்ந்த மஞ்சள் கையிருப்பு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
