இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் ரூ.1 இலட்சம் அபராதம்; புதிய சட்டத்திருத்தம்.!!!
இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 ஆக 10 மடங்கு அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர் வேலைவாய்ப்புச் சட்டத்தில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் பிரகாரம், பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பணிக்கு அமர்த்தி, நீதிமன்ற விசாரணையில் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் நபர்களுக்கு ரூ.100,000 வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரு தண்டனைகளையும் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ரூ.10,000 அபராதம் சிறுவர் தொழிலாளர் சுரண்டலைத் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என தொழிலாளர் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) உடன்படிக்கைகளுக்கு அமைவாகவும், சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து பணியிடங்களில் அவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்கிலும் இந்த புதிய சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.