கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் – பாதுகாப்பு பிரதி அமைச்சர்.!!!
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சர்வதேச காவல்துறையின் (INTERPOL) சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சில அரசியல் பிரமுகர்கள் அபாயகரமான குற்றவாளிகளுடனும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவருடனும் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், பிரதான குற்றவியல் வலைப்பின்னல்களின் தலைவர்களை இலக்கு வைத்து அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளால் பாதாள உலகக் குழுக்களிடையே அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தங்கியுள்ள திட்டமிட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
