அஸ்வெசும நிதி முறைகேடு: 14 அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!!!
• பல பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை.
நாடு முழுவதும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் அஸ்வெசும நலன்புரி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 14 அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சில அதிகாரிகள் அஸ்வெசும நிதியை தங்களது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாக மாற்றியமைத்துள்ளதாக கண்டறியப்பட்டதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலக மட்டத்தில் நலன்புரி உதவிகளை வழங்குதல் மற்றும் விநியோகித்தல் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், அதிகாரிகளின் பதவி அல்லது தரத்தைப் பொருட்படுத்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும் அனைவருக்கும் எதிராக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நோர்வுட் பிரதேச செயலகம் உள்ளிட்ட பல பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளில், நோர்வுட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அஸ்வெசும நிதி முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நலன்புரி நிதி தொடர்பான எந்தவொரு முறைகேட்டிலும் அரச அதிகாரிகள் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ள நலன்புரி நன்மைகள் சபை, தவறிழைக்கும் எந்தவொரு அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.