மக்கள் நலனுக்கான தீர்மானங்களில் ஜனாதிபதி உறுதி; விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டார் – நளிந்த ஜயதிஸ்ஸ.!!!
மக்கள் நலனுக்காக அரசாங்கமும் ஜனாதிபதியும் எடுக்கும் உறுதியான தீர்மானங்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுவது இயல்பானது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அல்லது விமர்சனங்களைப் பொருட்படுத்தாது, ஜனாதிபதி மக்கள் நலனை முன்னிறுத்தி உறுதியான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக மாற்றங்களின்போது சில தரப்பினருக்கு தற்காலிக பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கு உதாரணமாக ஆற்றின் குறுக்கே புதிய பாலமொன்று அமைக்கப்படும்போது, அதுவரை அப்பகுதியில் படகு சேவை நடத்தி வாழ்வாதாரம் பெற்ற ஒருவருக்கு தற்காலிக பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையை எடுத்துக்காட்டினார்.
அதேபோன்று, நீதிமன்ற நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும், பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எந்தவித விரக்தியும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் நல்ல தீர்மானங்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுவது இயல்பானது எனக் குறிப்பிட்ட அவர், பழமைவாத எண்ணங்கள், தங்களுக்கு ஏற்படும் தற்காலிக இழப்புகள், அரசியல் இலாப நோக்கங்கள் மற்றும் சரியான புரிதலின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.