கொழும்பு கடற்பரப்பில் 17 சரக்கு கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கு அவதான எச்சரிக்கை.!!!
கொழும்பு துறைமுகத்துக்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்று சரக்கு கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய கடல் நீரோட்டத்தின் காரணமாக, இந்த கொள்கலன்கள் பேருவளை முதல் நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்பரப்பை நோக்கி நகர்ந்து கரையொதுங்கும் அபாயம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த கடற்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடற்பயணங்களை மேற்கொள்பவர்கள் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், கடலில் மிதக்கும் சரக்கு கொள்கலன்கள் எதனையும் பொதுமக்கள் அல்லது மீனவர்கள் கண்டால், உடனடியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலிச் செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள கடற்றொழில் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


