ஜனாதிபதி தலைமையில் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆய்வு; கைத்தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்.!!!
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அமைச்சின் ஒவ்வொரு பிரிவும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களும் 2026ஆம் ஆண்டில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டதுடன், 2027ஆம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
தம்புள்ளை, இங்கிரிய, வாழைச்சேனை, மில்லனிய மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் புதிய கைத்தொழில் வலயங்களை அமைக்கும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். காணி ஒதுக்கீடு, மின்சாரம், குடிநீர், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளில் நிலவும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான உடனடி தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, கைத்தொழில் துறையில் அரசின் பங்கு மற்றும் அதன் வரையறைகளை தெளிவாக அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் தற்போதைய நிலை, சீனி மற்றும் உப்பு தொழிற்துறைகள் எதிர்நோக்கும் சிக்கல்கள், அவற்றுக்கான மாற்றுத் தீர்வுகள் உள்ளிட்ட விடயங்களும் கூட்டத்தில் ஆராயப்பட்டன.
மேலும், அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. பல்வேறு காலங்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மக்களின் வரிப்பணத்தில் பராமரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் மூலம் செயற்திறன் உயர்வதுடன், நிர்வாகச் செலவுகளும் குறைய வேண்டும் என வலியுறுத்தினார்.
தொழில்முயற்சியாண்மை மற்றும் கைத்தொழில் மாற்று அதிகாரசபை (EITA – Entrepreneurship and Industry Transformation Authority) அமைப்பதற்கான முன்மொழிவு மற்றும் அதன் செயற்திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
ஏற்றுமதியாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்க வேண்டிய பொதுவான நிவாரணங்கள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நாட்டிற்கு தனித்துவமான தொழில்துறை திறன்களை உருவாக்கும் நோக்கில், சில முக்கிய கைத்தொழில் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை முன்னுரிமையுடன் வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.



