‘ரெட் நோட்டீஸ்’ குற்றவாளி உட்பட 3 பேர் மலேசியாவில் கைது; இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.!!!
சர்வதேச காவல்துறையினால் ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளி உள்ளிட்ட மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த குறித்த முக்கிய குற்றவாளி, மலேசிய காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறையின் (INTERPOL) ஒத்துழைப்புடன் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் தொடர்பில் சர்வதேச அளவில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தேவையான சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த முக்கிய குற்றவாளியுடன் தொடர்புடைய மேலும் இருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும், கல்கிஸை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் அடங்குகின்றனர்.
மூவரும் மலேசிய அதிகாரிகளின் நடவடிக்கையின் பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



