நாடளாவிய தேடுதல் நடவடிக்கையில் 652 பேர் கைது; 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதனை.!!!
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நாடளாவிய நாளாந்த தேடுதல் நடவடிக்கையின் போது 652 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று (01) முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, நாடு முழுவதும் 26,377 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 652 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நீதிமன்றங்களால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 129 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 53 பேரும், அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 129 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,249 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தகைய விசேட தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.