7.6 மெக்னிடியூட் நிலநடுக்கம் பதிவு; பனாமாவில் கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்.!!!
பனாமா நாட்டின் தெற்குக் கடற்கரைப் பகுதிக்கு அருகில் 7.6 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட சில பிராந்தியங்களுக்கு ஆழிப்பேரலை (சுனாமி) அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, நேற்று (09) கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 8.0 மெக்னிடியூட் அளவாகக் கணிக்கப்பட்ட நிலநடுக்கத்தின் தீவிரம், பின்னர் 7.6 மெக்னிடியூட் அளவாகத் திருத்திப் பதிவுசெய்யப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் பனாமா பகுதியில் வெளியாகாத நிலையில், மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறும் காட்சிகள் தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் வெளியாகியுள்ளன.
இதனிடையே, மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் கொலம்பியா, ஈக்வடோர் ஆகிய நாடுகளுக்கு ஆழிப்பேரலை அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அமெரிக்க ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், பனாமாவின் தலைநகரான பனாமா நகரிலும், அண்டை நாடான கோஸ்டாரிகாவின் தலைநகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக, பாதிக்கப்படக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.