சவூதி ஆதரவுடன் யேமன் படைகள் முன்னேற்றம்; ஹூதிகளுக்கு எதிரான போர் தீவிரம்.!!!
சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசுப் படைகள், முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டெப் (Bab el-Mandeb) கடல்சந்திக்கு அருகிலுள்ள சில பகுதிகளை இன்று (05) கைப்பற்றியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் மேற்கொண்ட கடுமையான வான்வழித் தாக்குதல்களின் ஆதரவுடன், பாப் அல்-மண்டெப் கடல்சந்திக்கு மேல்பகுதியில் அமைந்துள்ள துபாப் (Dhubab) மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை யேமன் அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அந்தப் பகுதிகளில் முழுமையான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் அரசுப் படைகள் ஈடுபட்டுள்ளதாக மூன்று இராணுவ வட்டாரங்களும், ஒரு அரசாங்க வட்டாரமும் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன.
எனினும், அரசுப் படைகள் அப்பகுதியில் முன்னேறியுள்ளதாக வெளியான தகவல்களை ஹூதி அமைப்புக்கு ஆதரவான ஊடகங்கள் முன்னதாக மறுத்திருந்தன.
அமெரிக்கா–ஈரான் மோதலின் தாக்கத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த யேமன் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பல முக்கிய முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனிடையே, பாப் அல்-மண்டெப் கடல்சந்தியைக் கைப்பற்ற ஹூதி அமைப்பு முயற்சித்து வருவதுடன், சவுதி நகரங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் ஹோர்முஸ் (Hormuz) கடல்சந்தியை மூடியுள்ளதால் வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி ஏற்றுமதிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யேமனில் ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் மற்றொரு முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் உலக சந்தையில் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதுடன், ஏற்கனவே பதற்றமான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு அபாயமும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசு, இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.