துபாய்–டெல் அவிவ் விமானச் சம்பவம்: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு.!!!
• விமான காக்பிட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து விசாரணை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் ஆலோசகர் டாக்டர் ஹமாத் சைஃப் அல் ஷம்சி, Flydubai FZ1073 விமானம் தொடர்பான சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்புக் குழுவொன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த குறித்த விமானம், பின்னர் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாகத் திருப்பி விடப்பட்டது.
விமானப் பயணத்தின்போது காக்பிட்டில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து விமானப் பணியாளர்கள் தலையிட்டு விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்ததாகவும் Flydubai நிறுவனம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து ஆதாரங்களைச் சேகரித்து, சம்பவம் தொடர்பான உண்மைகளை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் இடம்பெறுவதற்கான சூழ்நிலைகள் மற்றும் அதற்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் நோக்கங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் பயங்கரவாதம், முன்கூட்டிய திட்டமிடல் அல்லது வெளிப்புற உத்தரவு ஆகியவற்றுடன் தொடர்புடையதா என்பதையும் விசாரணையாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
விசாரணை நிறைவடையும் வரை சம்பவம் தொடர்பாக யூகங்களை வெளியிடவோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவோ வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.