இரு வாரங்களில் 77 பேர் கைது – சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக கடற்படை அதிரடி.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
உள்ளூர் கடல் நீர்ப்பரப்புகளில் இடம்பெற்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் இணைந்து விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
2026 ஏப்ரல் 17 முதல் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வணிக வெடிபொருட்களுடன் பயன்படுத்தப்பட்ட 17 டிங்கி படகுகள் மற்றும் 6 டிராக்டர்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருகோணமலை, கந்தளாய், வாழைச்சேனை, கல்லராவ, கிண்ணியா, துடுவ, காயங்கேணி, போல்ட் பொயின்ட், சாம்பூர், சிலாவத்தை, இறக்கக்கண்டி, முகத்துவாரம், பனிச்சங்கேணி, நந்திக்கடல் களப்பு, யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி, பருத்தித்துறை மற்றும் மன்னார் சவாரிபுரம் உள்ளிட்ட கரையோரங்களிலும் கடற்பரப்புகளிலும் கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிராக்டர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோகிலாய், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வாழைச்சேனை, குச்சவெளி, சிலாவத்துறை மற்றும் கிண்ணியாவில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் வளங்களைப் பாதுகாப்பதும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதும் குறிக்கோளாகக் கொண்டு, எதிர்காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.






