பட்டத்தின் நூல் சிக்கியதால் விமானப்படை பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கம்.!!!
இரத்மலானை விமானப்படை தளத்தில் இன்று (15) பயிற்சியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் Y-12 வகை விமானம், பட்டத்தின் நூல் சிக்கிய காரணத்தால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த விமானத்தின் இடது பக்க சில்லு, இடது இயந்திரப் பகுதி மற்றும் மேலும் சில பகுதிகளில் பட்டத்தின் நூல்கள் அதிகளவில் சிக்கியிருந்தமை பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விமானப்படை, விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது விமானப் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என மீண்டும் எச்சரித்துள்ளது.
மேலும், உலகளாவிய ரீதியில் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது விமான விபத்துகளுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், விமான நடவடிக்கைகளுக்கு நேரடி தடையாகவும் அமைகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குரகொட, சீனக்குடா, அனுராதபுரம், யாழ்ப்பாணம்-பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில, மட்டக்களப்பு மற்றும் மத்தள ஆகிய பகுதிகளில் உள்ள விமான ஓடுபாதைகளைச் சுற்றியுள்ள இடங்களில் பட்டம் விடும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் அத்தகைய பகுதிகளில் பட்டம் விடுவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.



