முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல் – கைவிடப்பட்ட ஆட்டோ மீட்பு: இருவர் கைது.!!!
திருகோணமலையைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம், மூதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூதூர் தக்வா நகர் “பெந்திஸ் அடி” என அழைக்கப்படும் கடற்கரைப் பகுதியில் பச்சை நிற முச்சக்கரவண்டி ஒன்று நேற்று நள்ளிரவு கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதனை அவதானித்த மீனவர்கள் உடனடியாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறித்த முச்சக்கரவண்டி திருகோணமலையைச் சேர்ந்த சாரதிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர சவாரிக்காக மூவரை ஏற்றிச் சென்ற போது, தம்பலகாமம் நோக்கிச் செல்லும் வழியில் சாரதி தாக்கப்பட்டு வயல் பகுதியில் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, முச்சக்கரவண்டி கடத்திச் செல்லப்பட்டு பின்னர் மூதூர் கடற்கரை பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முச்சக்கரவண்டிக்குள் சாரதியின் அனுமதிப்பத்திரம் மற்றும் சில பண நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதியை தாக்கியதற்கான உண்மையான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மூதூர், தம்பலகாமம் மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


