புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: ஏழு பேர் காயம்.!!!
-கற்பிட்டி – எம். எச். எம். சியாஜ்-
ஆனமடுவ, கரம்பேவ பகுதியில் சனிக்கிழமை (18) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புத்தாண்டு விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த இரு தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தனிப்பட்ட பகைமையே இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாக்குவாதமாகத் தொடங்கிய இந்த பிரச்சினை பின்னர் கைகலப்பாக மாறியதாகவும், சம்பவத்தில் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டிருந்த சுமார் 20 பேர் வரை ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், காயமடைந்தவர்களுக்கு கடுமையான காயங்கள் எதுவும் இல்லை எனவும், சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.