தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் – ஜனாதிபதி.!!!
தமிழ் மொழி பேசும் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை எட்டுவதற்காக அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
போரினால் வீடுகளை இழந்த மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக, 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டங்களின் கீழ் இரண்டு கட்டங்களாக 13,000 வீடுகள் நிர்மாணிக்க நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேவேளை, அண்மைய அனர்த்தங்களால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவை கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகள் அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாடகை வீட்டு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது, மாகாண சபைத் தேர்தல் முறை, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அனைத்து கருத்துகளையும் கவனமாகக் கேட்டறிந்த ஜனாதிபதி, தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக இவ்வாறான கூட்டணியை உருவாக்கியமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், சமூகத்தில் தவறான புரிதல்கள் ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளைத் தாண்டி பொதுமக்களின் பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை வழங்குமாறு பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA), இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK), இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.








