டிட்வா சூறாவளி பாதிப்பு: சேதமடைந்த சமூக உட்கட்டமைப்புகளை மீளமைக்க தீவிர நடவடிக்கை.!!!
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணியின் கீழ் அமைக்கப்பட்ட உபகுழு, அதன் தலைவர் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் 5ஆவது முறையாக நேற்று (20) கூடியது.
இதன்போது, டிட்வா சூறாவளியால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புதல், எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
கல்வி, சுகாதாரம், கலாசார உட்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு வசதிகள் உள்ளிட்ட சமூக சேவைகளை மீளமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிக்கையில், அனர்த்தத்திற்குப் பின்னர் மீளமைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்காணித்து, அதுகுறித்த அறிக்கைகளை பிரதான குழுவிற்கு சமர்ப்பிப்பது உபகுழுவின் முக்கிய பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.
மேலும், நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொள்வதுடன், தேவையான கொள்கை முடிவுகளை மேற்கொள்ள கொள்கை வகுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதும் இந்த உபகுழுவின் பணியாகும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களின் உட்கட்டமைப்பு மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்து மாகாண பிரதம செயலாளர்கள் இணையவழி ஊடாக விளக்கமளித்தனர்.
அத்துடன், பொதுமக்கள் வசதிகளை மீட்டெடுக்கும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர்களும் தகவல்களை முன்வைத்தனர்.
கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.






