மக்கள் முறைப்பாடுகளுக்கு டிஜிட்டல் தீர்வு; ‘Public Security Help Desk’ ஆரம்பம்.!!!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் பொலிஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் எதிரான முறைப்பாடுகளை இனி இணையவழி (Online) மூலமாக நேரடியாகச் சமர்ப்பிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ‘Public Security Help Desk’ எனும் புதிய இணையவழிச் சேவை அதிகாரப்பூர்வமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையின் ஊடாக பொதுமக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை இணையவழியில் பதிவு செய்ய முடியும். அதேவேளை, முறைப்பாட்டிற்கு ஆதாரமாக புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களையும் எளிதில் பதிவேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்ற நிலையை நேரடியாக இணையவழியிலேயே கண்காணிக்கக்கூடிய வசதியும் இந்த அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களம் மட்டுமன்றி, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஏனைய அரசு நிறுவனங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளையும் இந்த இணையவழித் தளத்தின் மூலம் சமர்ப்பிக்க முடியும்.
அத்துடன், மிகவும் அவசரமான அல்லது முக்கியத்துவம் வாய்ந்த முறைப்பாடுகளை நேரடியாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் சிறப்பு தெரிவும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவைகளை மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடனும் விரைவாகவும் வழங்கும் நோக்கில் இந்த புதிய ‘Public Security Help Desk’ இணையவழிச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


