மறைவிடங்களில் நின்று வாகனங்களை நிறுத்த வேண்டாம்; போக்குவரத்து பொலிஸாருக்கு உத்தரவு.!!!
போக்குவரத்து விதிமீறல்களுக்காக வாகனங்களை நிறுத்தும் போது, புதர்கள் அல்லது தனிமையான இடங்களில் மறைந்து நின்று நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பொதுமக்களுக்கும் ஏனைய வாகன சாரதிகளுக்கும் தெளிவாகத் தெரியும் திறந்தவெளிப் பகுதிகளிலேயே அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீதியோரங்களில் பொலிஸ் அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய விதம் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களில் இதுதொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளுக்கு நினைவூட்டியுள்ளார்.