சாலைகளிலேயே போதைப்பொருள் பரிசோதனை; அதிநவீன ஆய்வுகூட வாகனம் களமிறக்கம்.!!!
போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய போக்குவரத்து குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், அதிநவீன நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை ஆய்வுகூட வாகனம் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு (NTMI) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இந்த ஆய்வுகூட வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் இன்று (10) போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த நடமாடும் ஆய்வுகூடத்தின் மூலம் தேவையான இடங்களுக்கு நேரடியாகச் சென்று போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் பாவனையின் கீழ் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்களை கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



