அவசரகால சட்டம் இனியும் நீடிக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு.!!!
தித்வா அனர்த்தத்தைத் தொடர்ந்து நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று (01) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தித்வா அனர்த்தத்திற்குப் பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டதையடுத்து அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு, இம்மாதத்திலிருந்து அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அவசரகால சட்டம் அரசாங்கத்தால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை சில தரப்பினர் சமூகத்தில் பரப்பியிருந்ததாகவும், ஆனால் மீள்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே அந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே தெளிவுபடுத்தியிருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், அவசரகால சட்டத்தின் காரணமாக எந்தவொரு பிரஜைக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் அல்லது ஊடகவியலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என அரசாங்கம் வழங்கியிருந்த உறுதிமொழிக்கேற்ப செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.