உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பிள்ளைகளுடன் உணர்வுப்பூர்வமாகச் செயல்படும் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர்.!!!

ஒவ்வொரு பிள்ளையையும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் அணுகும் சமூகச் சூழலை நாட்டில் உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பெற்றோர் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பிள்ளைகளின் தேவைகள், உணர்வுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசியல் அதிகாரிகளுக்கு மாத்திரமன்றி, ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் உரிய பொறுப்பு என பிரதமர் குறிப்பிட்டார்.

இசுருபாய கல்வி அமைச்சில் நேற்று (14) நடைபெற்ற தேசிய ஆரம்பப் பிள்ளைப் பருவக் கலைத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாக உருவாக்கப்பட்ட ஆசிரியர் வழிகாட்டி மற்றும் செயற்பாடுகள் வழிகாட்டித் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

“சரியானதொரு ஆரம்பம்” (Starting Right) என்ற கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டித் தொகுப்பில் ஆசிரியர் வழிகாட்டி, முன்மொழியப்பட்ட செயற்பாடுகள் வழிகாட்டி, கற்றல்–கற்பித்தல் சாதனங்களின் கையேடு மற்றும் பிரதான பயிற்றுநர்களுக்கான பயிற்சி கையேடு என நான்கு முக்கிய பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேசிய ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்திக் கலைத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாக ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் நடைமுறைச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இத்தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிள்ளைக்கும் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே தரமான கல்வியை வழங்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் வழிநடத்தலின் கீழ், தேசிய கல்வியியல் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு UNICEF அமைப்பும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இவ்வழிகாட்டித் தொகுப்பு தேசிய கல்வியியல் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதுடன், நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்து நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பிள்ளையை மையமாகக் கொண்ட, தேடல் மற்றும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையின் ஊடாக ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான மாற்றத்தை இந்த வழிகாட்டித் தொகுப்பு ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒன்றோடொன்று தொடர்புடைய, தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் கல்வி முறையொன்றை நாட்டில் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கல்வி முறையில் உருவாக்கப்படும் கொள்கைகள் மற்றும் கலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் சம அளவிலான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இவ்வழிகாட்டியை நாடு முழுவதும் முறையாக நடைமுறைப்படுத்துவதையும் கண்காணிப்பதையும் மாகாணக் கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதுடன், ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய விதம் தொடர்பில் பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிள்ளைகளின் தேவைகள் மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுடன் உணர்வுப்பூர்வமாக நடந்து கொள்வதற்கான சமூகச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், பிள்ளைகளைப் பராமரித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாவலர்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவதும் சமூகத்தின் பொறுப்பு என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், 2026ஆம் ஆண்டை ஆரம்பப் பிள்ளைப் பருவத் துறையை அனைத்து விதங்களிலும் அபிவிருத்தி செய்யும் ஆண்டாக முன்னெடுக்க தமது அமைச்சு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த வழிகாட்டித் தொகுப்பு நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக அமைக்கப்படும் வலுவான அடித்தளம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், 2027ஆம் ஆண்டில் ஒரே தேசியக் கொள்கையின் கீழ் இயங்கும் நம்பகமான முன்பள்ளி முறைமையை நாடு முழுவதும் உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, தேசிய கல்வியியல் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டார உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்வி அதிகாரிகள் மற்றும் UNICEF பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215531

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time