மட்டக்களப்பில் 9 நாட்களில் 35 பேருக்கு டெங்கு நோய்; 35 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடந்த 09 தினங்களில் 35க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் எனவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
இந்த வாரத்தில் டெங்கு தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக சுற்றாடலை வைத்திருந்த 35 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்து டெங்கு சிவப்பு வலயமாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமாரின் தலைமையின் கீழ் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்றைய தினம் புளியந்தீவு பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் வாவிக்கரையோரங்கள் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நுளம்பு பெருகும் வகையில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.
புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் ப.முருகதாசின் தலைமையில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்போது மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமார் விஜயம் செய்து சிரமதான பணிகளை பார்வையிட்டார்.
புளியந்தீவு பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.