பேஸ்புக் வாகன விற்பனை மோசடி; விற்ற வாகனங்களையே கொள்ளையடித்த கும்பலில் ஒருவர் கைது.!!!
பேஸ்புக் ஊடாக வாகனங்களை விற்பனை செய்து, பின்னர் அவற்றை திட்டமிட்ட முறையில் பின்தொடர்ந்து ஆயுதமுனையில் மீண்டும் கொள்ளையடித்து வந்ததாகக் கூறப்படும் கும்பலைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யக்கல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஜூலை 1 ஆம் திகதி, 40 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட வேன் ஒன்று துப்பாக்கி ஏந்திய குழுவினரால் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் உதவிப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளில், பெலும்மஹர – முதுன்கொட பகுதியில் இயங்கும் வாகன விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பேஸ்புக்கில் வாகன விளம்பரங்களை வெளியிட்டு, வாங்குபவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், வாகனத்தை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து கொள்ளையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேபோன்ற மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலும் இந்தக் கும்பலுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகன விற்பனை நிலைய உரிமையாளர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலகெடிஹேன பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலைய உரிமையாளரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 2 வாள்கள், 2 பிஸ்டல் மெகசின்கள், 3 தோட்டாக்கள் மற்றும் ஒரு ஜீப் வண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (14) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.