ரூ.2.9 இலட்சம் நிதி கையாடல் குற்றச்சாட்டு; பெண் பொலிஸ் அதிகாரி கைது.!!!
இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகள் மூலம் வருமானமாகப் பெறப்பட்ட சுமார் ரூ.2 இலட்சத்து 90 ஆயிரம் பணத்தை கையாடல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அங்கு பணியாற்றி வந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் அம்பாறை பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மேற்கொண்ட உள் தணிக்கை (Internal Audit) நடவடிக்கையின் போது குறித்த நிதி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கும் வருமானப் பணம், அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டும்.
எனினும், குறித்த நிதி உத்தியோகபூர்வ கணக்கில் செலுத்தப்படாமல் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, சந்தேகநபரான பெண் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பிரிவின் பிரதிப் பொலிஸ் அதிகாரி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (I) சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.