பொத்துவில் கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான மீனவர் கடற்படையினரால் உயிருடன் மீட்பு.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
பொத்துவிலுக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான உள்நாட்டு மீன்பிடி படகில் சிக்கியிருந்த மீனவர் ஒருவர், இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (MRCC) வழங்கிய அறிவித்தலின் பேரில், கடந்த ஜூலை 17 ஆம் திகதி இலங்கை கடற்படையின் ‘விஜயபாகு’ கப்பல் மற்றும் கடற்படைப் படகுகள் மூலம் கடலில் விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, பொத்துவிலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் ஆபத்தான நிலையில் இருந்த மீன்பிடி படகிலிருந்து குறித்த மீனவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட மீனவருக்கு கடற்படைக் கப்பலிலேயே உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதுடன், பின்னர் கரைக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை, கொழும்பு கடற்படை பிரிவில் செயல்படும் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகளுக்கு அவசர உதவிகளை வழங்க இலங்கை கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


