5 வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள்; ரூ.57.6 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வழங்கல்.!!!
பதுளை மாவட்ட வைத்தியசாலைகளின் சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், ரூ.181.5 மில்லியன் செலவில் புதிய அம்பியூலன்ஸ்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (11) பதுளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதற்காக 5 புதிய அம்பியூலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.123.9 மில்லியனும், நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக ரூ.57.6 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது.
இதன் கீழ் தியத்தலாவை, வெலிமடை, பண்டாரவளை, கொஸ்லந்த மற்றும் லுணுகலை ஆரம்ப வைத்தியசாலைகளுக்கு தலா புதிய அம்பியூலன்ஸ்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாவட்டத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் வகையில் ரூ.57.6 மில்லியன் பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களும் சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், ஊவா மாகாண பிரதம செயலாளர், ஊவா மாகாண சுகாதார செயலாளர், பதுளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
புதிய அம்பியூலன்ஸ்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் பதுளை மாவட்டத்தின் கிராமப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.








