ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சடலமாக மீட்பு.!!!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன இன்று (08) கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீட்டில் கதவிலிருந்து தொங்கிய நிலையில் அவரது உடல் காணப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த மார்ச் 12 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தினால் கபில சந்திரசேன கைது செய்யப்பட்டிருந்தார்.
எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 5 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம அவர்களினால் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி 500,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக அவரது உறவினர்கள் என பொய்யாக முன்னிலையாகிய இருவர் போலி உறவினர்கள் என விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்த நிலையில், குறித்த சந்தேகநபர்கள் தலா 15,000 ரூபாய் பெற்றுக்கொண்டு உறவினர்களாக முன்னிலையானதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாகக் கருதி கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.