மக்களைக் காக்க கைகோர்த்த சுகாதார அமைச்சும் வைத்தியர் சங்கமும்; டெங்கு ஒழிப்புக்கு புதிய வியூகம்.!!!
நாட்டில் தரமான மற்றும் சிறந்த சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) புதிய நிர்வாகக் குழுவினருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் அண்மையில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் சந்திரிக எபிட்டகடுவ மற்றும் செயலாளர் வைத்தியர் பண்டார வரககொட உள்ளிட்ட நிர்வாகக் குழுவினருக்கு அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் தற்போது நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவல் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சையளிக்கும் போது நிபுணர் மருத்துவர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், டெங்கு ஒழிப்பு தொடர்பான அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதியளித்ததுடன், மருத்துவர்களின் தொழில்சார் தேவைகள் மற்றும் சுகாதாரத் துறையின் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விடயங்களும் இதன்போது விவாதிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர்கள், உதவிச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்று சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

