அர்ச்சுனா எம்.பி. – அமைச்சர் சந்திரசேகர் இடையே கடும் வாக்குவாதம்; கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பாதியில் நிறுத்தம்.!!!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் இடைநிறுத்தப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா மற்றும் அரச அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டத்தின் போது, மாவட்டத்தின் கமக்கார அமைப்பொன்றின் தலைவரை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா, அவரது தனிப்பட்ட வீட்டிற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றை குறித்த அமைப்பின் தலைவர் பலவந்தமாக பெற்றுக்கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியதாக கூறப்படுகிறது.
அத்துடன், காணி தொடர்பான ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உதவியுள்ளதாகவும் அவர் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, “ஊழல்” எனக் கூறி பாராளுமன்ற உறுப்பினர் பலமுறை சத்தமிட்டதாகவும், அதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட அரச அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கூட்டத்தை வழமையாக நடத்த அனுமதிக்குமாறு வலியுறுத்திய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலைமை பதற்றமடைந்ததை அடுத்து, பொலிஸார் தலையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா பொலிஸ் பாதுகாப்புடன் கூட்ட அரங்கிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன் காரணமாக, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.