மத்திய மலைநாட்டில் கனமழை; சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை.!!!
மத்திய மலைநாட்டில் இன்று (07) இடைக்கிடையே பெய்து வரும் கனமழையுடன் அடர்ந்த பனிமூட்டமும் நிலவி வருவதால், பல பகுதிகளில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹட்டன் – நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வீதிகள் தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால், குறித்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக வீதிகளில் வழுக்கும் தன்மை அதிகரித்துள்ளதுடன், திடீர் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயமும் காணப்படுவதால், சாரதிகள் வேகத்தைக் குறைத்து பயணிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், மலைப்பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




